குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வகையில், தமிழகம் முழுவதும் 33,000 ரேஷன் கடைகள், கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படுகிறது. எனினும், காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்றுவரும் வசதிகள் குறைவாக இருப்பதாலும், மலைக் கிராமங்களில் இருக்கும் ரேஷன் கடைகளை, யானை முதலிய வன விலங்குகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக நடப்பதாலும், நடமாடும் ரேஷன் கடைகள் வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழகம் முழுவதும் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இன்று (21.09.2020) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், 'அம்மா நகரும் ரேஷன் கடை'களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், சென்னை-400, நாகை-262, கிருஷ்ணகிரி-168, திருவண்ணாமலை-212 என மொத்தம் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. அதேபோல், மின்சாரம் மற்றும் சூரியசக்தியில் இயங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்ட 13 நவீன ஆட்டோக்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
இந்நிலயில் மயிலாப்பூர் சோலையப்பன் தெருவில், நடமாடும் ரேஷன் வண்டி வந்தவுடன் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால் தொகுதி எம்.எல்.ஏ.வான நட்ராஜ் வந்தவுடன்தான் பொருட்கள் விநியோகம் செய்வோம் என அதிகாரிகளும் ஊழியர்களும் கூறினர். இதனால் அப்பகுதி மக்கள் ஒரு மணி நேரமாகக் காத்திருந்தனர்.