திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல திங்கட்கிழமை இரு ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் இடையே நடைபெற்ற தகராறில், பிரேதத்தை ஆம்புலன்ஸ் மாற்றி ஆம்புலன்ஸ் அலைக்கழித்த ஓட்டுநர்களின் செயல் அனைவரிடமும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறையை அடுத்த சங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி மனைவி பழனியம்மாள் (65). இவர் தனது மகன் ராஜா (40) என்பவருடன் திங்கட்கிழமை (17.05.2021) காலை இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்துவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது புதுக்காலனி அருகே, அவ்வழியாக சென்ற ஒரு ட்ராக்டர் மோதி இருச்சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பழனியம்மாள் நிகழ்விடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதில் ராஜா காயமடைந்தார். இந்நிலையில் விபத்தில் இறந்த பழனியம்மாளின் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உடலை ஸ்டெரெச்சரில் ஏற்றி வைத்து காவல்துறையினருக்காக காத்திருந்தனர். அதுசமயம் அருகிலேயே மற்றொரு விபத்து ஏற்பட்டதால், அதில் காயமடைந்தவரையும் நாமே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், பிரேதத்தை ஸ்டெரெச்சரிலேயே விட்டுவிட்டு, காயமடைந்த நபரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றது ஆம்புலன்ஸ்.
இந்நிலையில், தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றொரு ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்கவே, அங்கு வந்த இரண்டாவது ஆம்புலன்ஸ் பிரேதத்தை தங்களது ஸ்டெரெச்சரில் மாற்றி எடுத்துக்கொண்டு வண்டியில் ஏற்றியது. அதேசமயம் அங்கு வந்த முதலாவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பிரேத்தை நாங்கள்தான் எடுத்து வைத்துவிட்டுச் சென்றோம், எனவே பிரேதம் எங்கள் ஆம்புலன்ஸில்தான் கொண்டு செல்வோம் என விடாப்பிடியாக பேசத் தொடங்கினார். இதில் இரு ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்கு காவல்துறையினரும், அருகில் இருந்தவர்களும் சமரசம் செய்தும், முதலாவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரண்டாவது ஆம்புலன்ஸில் இருந்து பிரேதத்தை எடுத்து தங்களது வாகன ஸ்டெரெச்சரில் மீண்டும் மாற்றிக்கொண்டு, தங்களது ஆம்புலன்ஸில் உடலை வைக்க சிறிது தூரம் தூக்கிக்கொண்டே சாலையில் சென்று, பின் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பழனியம்மாள் உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மணப்பாறையில் பெருகிவரும் தனியார் ஆம்புலன்ஸின் காரணமாக, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கவும் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லவும் போட்டாப்போட்டி போடுவது வழக்கம் என்றபோதும், ஒரு பிரேதத்தை ஆம்புலன்ஸ் மாற்றி ஆம்புலன்ஸ் அலைக்கழித்த நிகழ்வு மனித உரிமை மீறிய செயலாகவும், முகம் சுழிக்கும் விதமாகவும் இருந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள மணப்பாறை போலீஸார், விபத்து ஏற்படுத்திச் சென்ற ட்ராக்டரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.