அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யும் 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு' உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தர சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை எனவும் மாறாக, சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தாக்கல் செய்த பதில்மனுவில், தேர்தலின் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை அடையாளம் காண, சின்னங்கள் அவசியமாகின்றன. இருப்பினும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிரந்தர சின்னங்கள் வழங்கப்படுவதில்லை. அதற்கு சில வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கல்வியறிவு அதிகரித்திருந்தாலும், தேர்தல் நேரங்களில் விரைந்து வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகச் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும், ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னங்களை ஒதுக்கினால் அது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னங்களைப் பிரபலப்படுத்த அரசு நிதியையோ, அரசு இயந்திரத்தையோ பயன்படுத்தினால், சின்னத்தைத் திரும்பப் பெறுவது, தேர்தலை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்குப் பதிலளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால், விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.