ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெகுவிமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக போட்டி நடப்பதில் சிக்கல் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு தற்போது நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.