/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PO32323.jpg)
காவல்துறையினரின் அனுமதியின்றி நடைபெற்ற டிஜெ ஆடல், பாடல் மதுவிருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை திருமங்கலத்தை அடுத்த விஆர் மாலில் நான்காவது தளத்தில் டிஜெ ஆடல், பாடல் நிகழ்ச்சி பிரேசில் நாட்டைச் சேர்ந்த 'MANDRAGORA' என்ற உலகப் பெற்றவரின் பெயரால் நேற்று (21/05/2022) இரவு நடத்தப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி வாங்காமல் மது விருந்து நடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ரூபாய் 1,500 கட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 900 பேர் கலந்துக் கொண்டதும், அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது.
அனுமதி பெறாததால் காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தினர். அத்துடன், அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 844 விலை உயர்ந்த மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், நிகழ்ச்சியை நடத்திய விக்னேஷ், துரை, பரத் மற்றும் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, மதுவிருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிரவீன் என்பவர், பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போதே, மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மது விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்திலும், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)