தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவைத் தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி அமைத்திருந்தது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்து அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு கடந்த ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது.
கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் (செப்.13) சட்டமுன் வரைவு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பித்த நீட் தொடர்பான அறிக்கை கடந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனியாகச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம். நீட் தேர்வை ரத்து செய்யத் தனிச் சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும். மருத்துவ மாணவர் சேர்க்கையை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஏ.கே.ராஜனின் நீட் தொடர்பான ஆய்வறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழக முதல்வரிடம் வழங்கினார்.