
சமீபத்தில்தான் கோவை விமானப் படை முகாமில் பயிற்சிக்காக வந்த இளம்பெண்ணை விமானப் படை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கில் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது, பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காகப் பெங்களூருவிலிருந்து 13ஆம் தேதி மாலை புறப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு பெட்டியில் தனியாகப் பயணம் செய்தார். அதே முன்பதிவு பெட்டியில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயது பிரப்ஜோட் சிங் என்பவரும் பயணம் செய்தார். அப்போது தனியாகப் பயணம் செய்த அந்தப் பேராசிரியையிடம் பிரப்ஜோட் சிங் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். மத்திய அரசு அதிகாரி என்பதால் மரியாதை கொடுத்துப் பேசினார் அந்த இளம் பேராசிரியை. தொடர்ந்து பேசிய பிரப்ஜோட் சிங், பாலியல் ரீதியான வார்த்தைகளைச் சாதாரணமாகப் பேச தொடங்க, தவறான அர்த்தத்துடன் பேசுவதை உணர்ந்து பேசாமல் அவரது பெர்த்தில் படுத்துக்கொண்டார் அந்த இளம்பெண். ஆனால் விடாத அந்த விமானப் படை அதிகாரி அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடத் தொடங்கினார்.
நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் மற்ற அனைத்து பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். பிரப்ஜோட் சிங் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டே வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் எல்லை மீறுவதை அறிந்த அந்தக் கல்லூரி பேராசிரியை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரியை எச்சரித்தார். ஆனால் அந்த அதிகாரி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதுவரை அமைதி காத்திருந்த அந்த இளம் பேராசிரியை, ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்து நின்றதும் உடனடியாக ரயிலில் இருந்து இறங்கி, ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்குச் சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட் சிங்கை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வாருங்கள் அழைத்துள்ளனர். அதற்கு அந்த அதிகாரி, “நான் சென்டர் கவர்மென்ட் ஆஃபீசர் தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் கூப்பிட்டா எல்லாம் நான் வர முடியாது” என ரயில்வே போலீசாரை மிரட்ட, அந்த நபரை ரயிலைவிட்டு குண்டுக்கட்டாக தூக்கிவந்தனர். பிறகு அந்த நபரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரயிலில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் பாலியல் அத்துமீறல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தில் பிரட்ஜோட் சிங்கை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
"சார் இதுபோன்று சில பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு புகார் கொடுக்கிறார்கள். ராணுவ அதிகாரி என்ற பெயரில் பலபேர் தனியாகவரும் பெண்களிடம் அத்துமீறுகிறார்கள். சில பெண்களை ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமையும் செய்துவிடுகிறார்கள். பயம், அவமானத்தில் சிலர் புகார் கொடுப்பதில்லை. ராணுவத்தினர், மத்திய அரசு ஆஃபீசர், ஸ்டேட் போலீஸ் எதுவும் செய்ய முடியாது என்று அதிகார வெறியால்தான் இப்படி அவர்கள் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள்." என்றனர் ரயில்வே போலீசார்.
மனித உரிமை மீறல், மக்கள் விரோதபோக்கு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க இந்தியா முழுக்க ஒரே சட்டம்தான் என்பதை எல்லை மீறும் குற்றவாளிகள் உணர வேண்டும்.