சாவு வீட்டிலும் கூட அரசியல் நடத்த தயங்க மாட்டார்கள் அரசியல்வாதிகள் என்பது இந்த சம்பவம் ஒன்றே சாட்சி என்கிறார்கள் மக்கள். கரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய மக்களுக்கு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டது மத்திய அரசு.தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது.
வறுமையினால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், அன்றாடம் கிடைக்கும் வேலைக்கு உழைத்து அன்றைய தினத்தின் பசியை போக்கும் அப்பாவி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்துவிட்டால் அவர்கள் உணவுக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு நிவாணம் கொடுப்பது அரசின் கடமை அதை உடனே செய்ய வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் என மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கையும் வேண்டுகோளாகவும் குரலை உயர்த்தி கேட்டது. அதன் பலனாக இங்குள்ள மாநில எடப்பாடி அரசு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்குவதோடு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ரேசன் கடையில் அரிசி பெறும் கார்டு வைத்துள்ள அணைவருக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஆயிரம் ரொக்கமாக கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
ரேசன் பொருட்கள் நேரடியாக கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் எனவும் பணம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என அரசு உத்தரவு வந்தது. இதில்தான் அரசியல் செய்கிறது ஆளும் அ.தி.மு.க. மக்களுக்கு நிவாரண நிதியாக அரசு கொடுக்கும் பணம் என்பது மக்களின் வரிப்பணம் இது ஏதோ அ.தி.மு.க.வினர் முன்பு ஒட்டு வாங்க ஒட்டுக்கு பணம் கொடுத்தது போல் களத்தில் இறங்கி கொடுக்க தொடங்கி விட்டனர். அப்படியொன்று தான் இந்த சம்பவம்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 23 வது வார்டு பகுதியில் நிவாரண தொகை ரூபாய் 1000 ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்காமல் அந்த வார்டு அதிமுக செயலாளர் முகமது யூசுப் என்கிற முபாரக் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நான்காம் தேதி காலை முதல் மாலை வரை முபாரக் தனது அலுவலகமாக வைத்திருக்கும் அவரது ஜெராக்ஸ் கடையில் வைத்து அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரண பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். அந்த வார்டு பொதுமக்கள் ஆண் பெண் என எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்து அவரது கடையில் இருந்து 1000 ரூபாய் வினியோகிக்க தொடங்கினார்.
இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கூறினார்கள். அரசின் நிவாரண நிதி எப்படி ஆளுங்கட்சி அதிமுக வார்டு செயலாளர் கொடுக்கலாம் என கேள்வி எழுப்ப, அந்தப் பகுதிக்கு வந்த கோபி வருவாய் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களிடம் நீங்கள் நேரிடையாக கொடுக்க வேண்டாம் ரேஷன் கடை ஊழியர்கள் கொடுக்கட்டும் நீங்கள் வேண்டுமானால் ரேசன் கடை பணியாளர்களோடு சென்று பொதுமக்கள் யார், யார் என அடையாளம் காட்டுங்கள் என்று மறைமுகமாக நீங்கள் தலைமையேற்று செல்லுங்கள் என அதிகாரிகள் கூறிவிட்டு சென்று விட்டனர். அதன்பிறகு அவரது கடையில் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வீதியாக சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் நின்று கார்டுதாரர்கள் ஐந்து ஆறு பேரை வரவழைத்து ஊழியர்கள் முன்னிலையில் மீண்டும் பணம் கொடுத்தார்.
எந்தந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல் இந்த நிவாரண உதவியை கூட அதிமுக அரசியல் செய்தது அவலமாக தெரிகிறது. என பணம் பெற்ற மக்களே திட்டிக் கொண்டு சென்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதி அதிமுகவின் சீனியர் அமைச்சரான செங்கோட்டையின் ஊர். அவரது ஏற்பாட்டின் அடிப்படையிலேயே அதிகாரிகள் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மூலம் நிவாரண உதவியை கொடுத்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் மட்டுமல்ல ஈரோட்டிலும் ஏன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிமுக நிர்வாகிகள் நேரில் நின்று ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும், வேலை இழந்த அப்பாவி பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாயை ஏதோ இவர்கள் வீட்டு பணம் போல் கொடுத்து வருகிறார்கள் என்பது தான் பரிதாபம்.