தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே, அதிமுகவினர் முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சேலை விநியோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை பிப். 26ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது அரசியல் கட்சியினர் மக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை (பிப். 26) இரவில் வீடு வீடாகச் சென்று சேலைகளை வழங்கினர்.
சேலைகளை ஒரு பாலிதீன் பையில் போட்டு வழங்கினர். பாலிதீன் பையின் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் இரண்டு விரலைக் காட்டும் படம், ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. மேலும், 'மீண்டும் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே' என்றும், அதன் அருகில் இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டு இருந்தது.
நள்ளிரவு நேரத்தில் கட்சியினர் சென்றதால் பலர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். திறக்கப்படாத வீடுகளில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் சேலையை வீசிவிட்டுச் சென்றனர். வீட்டு திண்ணைகளிலும் சேலையை வைத்துவிட்டுச் சென்றனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மற்ற அரசியல் கட்சியினர் கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றி அதிமுகவினருக்கு எந்த கவலையும் இல்லை. தேர்தல் அறிவித்த முதல் நாளிலேயே சேலையை விநியோகிக்க தொடங்கி விட்டனர். அதற்கு அடுத்து வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்யவும் தயாராகிவிட்டனர். தேர்தல் அதிகாரிகள் எடப்பாடி தொகுதியை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடக்கும்,'' என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
