
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூர் மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், நேற்று (22.02.2021) காலை கவுன்சிலர் ராஜேஷ் வீட்டிலிருந்து ஆலங்காடு செல்லும் வழியில், 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ராஜேஷை கொடூரமாக தாக்கி சாலை ஓர புதருக்குள் தள்ளிவிட்டனர். பின்னர் சரமாரியாக வெட்டி தலையைத் தனியாக எடுத்துக்கொண்டு வந்து, 2 கிமீ தூரத்தில் உள்ள முத்துப்பேட்டை ஆசாத் நகர் கடைவீதியில் நடுரோட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸார் தலையையும் உடலையும் கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால், கவுன்சிலர் ராஜேஷின் உறவினர்கள் திரண்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளைக் கைது செய்யும் வரை சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க கையெழுத்து போட மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் கேள்விப்பட்டு பல பகுதிகளில் இருந்தும் வந்துள்ளனர். மேலும் கோவிலூர் மதனின் சகோதரர் அமமுக ஜெகன் உட்பட சிலரது பெயர்களை எழுதி புகார் கொடுத்துள்ளனர்.

இதே போல இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் காலை முதல் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பிரமுகர் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியதால், கைது செய்துள்ள படத்தைக் காட்டுங்கள் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக கவுன்சிலர் ராஜேஷ் படுகொலையைக் கண்டித்து பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.