Skip to main content

இறால் குட்டைகளால் அழிவுப்பாதைக்கு போகும் விவசாயம்! - விவசாயிகள் வேதனை

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
farm


நாகை மாவட்டத்தின் பெரும்பாலான நீர் நிலைப்பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்.

நாகை மாவட்டத்தில் கடலோரம் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், நீர்நிலைகளின் கழிமுகத்து வாரப்பகுதிகளை ஆக்கிரிமித்து ஆயிரக்கணக்கான இறால் குட்டைகள், பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான குட்டைகள் அனுமதியில்லாமலே செயல்பட்டு வருகிறது.

இறால் பண்ணைகளால் கடற்கரையோரம் உள்ள பகுதிகள் மட்டுமின்றி நாகை மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்களில் உப்புநீர் கலந்துவருகிறது. அதனால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

அந்தவகையில் நாகை மாவட்ட ஆட்சியருக்கு, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். "நாகை மாவட்டத்தில் 26-க்கு மேற்பட்ட ஆற்றங்கரைகளின் பாதைகளை ஆக்கிரமித்து இறால் பண்ணைகள் அமைக்கப்படும் போக்குத் தொடர்ந்து வருகிறது. இறால் பண்ணைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்கரைகளால், கொள்ளிடம் முதல் வேதாரண்யம் வரை 183 கி.மீட்டர் தொலைவுக்கான கடலோரப் பகுதிகளில், வெள்ள நீர் நேரடியாக கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

farm


இறால் வளர்ப்புக்காக தேக்கப்படும் உவரி நீர், நிலத்தடி நீரை பாதிக்காத வண்ணம் பாலித்தின் விரிப்பை தரையில் விரித்து வைக்கும் தற்காப்பு நடவடிக்கையை இறால் பண்ணைகள் மேற்கொள்ளாததால், நிலவளம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் உவர் தன்மைக் கொண்டதாக மாறி வருகிறது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 57 சதவீத நிலப்பரப்பு உவர் தன்மைக் கொண்டதாக மாறியுள்ளது என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தின் வேளாண்மையை அழிவிலிருந்து காக்கவும், வெளி மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் கருத்தில் கொண்டும், ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று மனுவின் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

சார்ந்த செய்திகள்