கடந்த 10 வருடங்களாக, தமிழகத்தில் ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, ஏழைகளின் வீடுகளில் கல்வி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது நடிகர் சூர்யாவின் 'அகரம்' ஃபவுண்டேஷன்.
கரோனா காலத்தில் கூட விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழக்கம் போல ஆய்வுகள் செய்து, கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் ஆண்ட்ராய்டு ஃபோன் இல்லாமல், இணைய வகுப்புகளில் பங்குபெற முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதனையறிந்த, 'அகரம்' அறக்கட்டளையினர், ஏழை மாணவ, மணவிகள் சுமார் 500 பேருக்கு ஆண்ட்ராய்டு ஃபோன் வழங்கத் திட்டமிட்டனர். இந்தத் திட்டம் பற்றி அறிந்த அமெரிக்க வாழ் தமிழரான கல்யாணராமன், செல்ஃபோன்கள் வழங்க முன்வந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னார்வலர்கள் முன்னிலையில், மாணவ, மாணவிகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கப்பட்டது. செல் ஃபோன்களுடன் அறிவுரைகள் அடங்கிய துண்டறிக்கையும் வழங்கப்பட்டது. அதில், இந்த செல்ஃபோனை, தகவல்களை அறிந்துகொள்ளுதல், பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் போன்ற பயனுள்ளவற்றுக்காக மட்டும் பயன்படுத்துங்கள். ஆனால் விளையாட்டு, தேவையில்லாத பொழுதுபோக்குகள், நாள்முழுவதும் செல் ஃபோன்களில் மூழ்கக் கூடாது என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபோன்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும் பயனுள்ள வகையில் மட்டுமே பயன்படுத்துவோம் என்றனர்.