அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. இரு தரப்பின் இறுதி விசாரணையும் முடிவடைந்த நிலையில், நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழக்கு குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது. மேலும் இரு நீதிபதிகள் தீர்ப்பில் முரண்பட்டதால் இந்த வழக்கில் தனது கருத்தை 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் தீர்ப்பு குறித்து பேசுகையில், “நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ‘அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் நாளின் காலையில் இருந்து அவரது வீட்டில் விசாரணையும் சோதனையும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணம் குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என தெரிவித்தார். இந்த கருத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.
காவல் அதிகாரிகள் கைதுக்கான காரணம் தெரிவிக்க வேண்டும் என்றால் அதனைத் தெரிவிக்க வேண்டும். முதல் 15 நாளில் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்றால் பிறகு எப்போதுமே விசாரிக்க முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் செந்தில் பாலாஜி மீதான காவல் இன்னும் முடியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜியை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. எனவே இந்த காவலை நீட்டிக்கலாம் என புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுவரைக்கும் இப்படிப்பட்ட கருத்தை உச்ச நீதிமன்றமே சொல்லவில்லை. வழக்கின் முக்கியத்துவம் என்னவென்றால், அமலாக்கத்துறையினர் காவல் அதிகாரிகள் அல்ல என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூட இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் காவல் அதிகாரிகள் அல்ல என கூறினார். நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமலாக்கத்துறையினர் காவல் அதிகாரிகள் இல்லை தான். ஆனாலும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். புரிந்துகொள்ள வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை. இந்த வழக்கில் இப்படியான சூழல் தான் இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் 24 ஆம் தேதி அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் இந்த தீர்ப்புகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் இறுதியான முடிவை எடுக்கும்” என தெரிவித்தார்.