Skip to main content

மயிலாடுதுறையை புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி! - புதிய மாவட்டமாக அறிவிக்க வழக்கறிஞர் கூட்டமைப்பு வேண்டுகொள்!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும், பரிசீலனை என்கிற பெயரில் ஏமாற்ற வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Advocate federation request to Tamil Nadu Government

 



இது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை சேர்ந்த மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு வகையில் போராடி வருகிறார்கள். புதிய  மாவட்டம் கேட்காத மக்களுக்கு புதிய மாவட்டங்களை அறிவித்த தமிழக அரசும், முதல்வர் பழனிச்சாமியும் ,ஏனோ மயிலாடுதுறையை தொடர்ந்து புறக்கணித்தும் புதிய மாவட்டமாக அறிவிக்கவும் தயங்கி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களையே மயிலாடுதுறை கோட்ட மக்கள் வெற்றிபெற வைத்தாலும், அதற்கு நன்றிக் கடனாக தமிழக அரசு புதிய மாவட்டத்தை இதுவரை அறிவிக்காமல் பரிசீலனை  என்ற பெயரில் ஏமாற்றுவது வேதனை அளிக்கிறது.

நாளை மறுநாள் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உடனடியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் அதை விடுத்து பரிசீலனையில் உள்ளது விரைவில் அறிவிப்போம் என்று இழுத்தடிக்கும் வேலையிலும், ஏமாற்றும் வேலையிலும் ஈடுபடக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்திற்கு வழங்கிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை பகுதிக்கு வேண்டும் என அம்மக்கள் கேட்டும் அவர்களை புறக்கணித்தது தமிழக பழனிச்சாமி அரசு, நாகையில் நடைபெற்ற மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிலாவது மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் என ஆர்வமாக இருந்த மயிலாடுதுறை மக்களை, மீண்டும் ஏமாற்றிவிட்டது எடப்பாடி பழனிச்சாமி அரசு.

 


 

சார்ந்த செய்திகள்