Skip to main content

திருமாவளவனுக்கு டாக்டர்கள் சொன்ன அட்வைஸ்!

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
ட்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

 

அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள மறைந்த அனிதாவின் இல்லத்தில் அவரின் நினைவு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அருகில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூரில் இரவு தங்கினார்.  விடியற்காலையில்  விழுப்புரம் மாவட்டத்தில் பங்கேற்க அங்கனூரில் இருந்து புறப்பட்டார்.   திண்டிவனத்தில் காலையில் டிபன் சாப்பிட்டார்.  அங்கே ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் புதியவன் மகிழினி திருமணத்தை நடத்தி வைத்தார்.  பின்னர் அங்கிருந்து கீழ் எடையாளம் கிராமத்திற்கு சென்றார்.  அப்பகுதி மாவட்ட செயலாளர் ஆற்றல் அரசு பனை விதைகளை ஊன்றுவதற்காக அழைத்துச்சென்றார்.   அங்கே திருமாவளவனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.  இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இதைக்கேள்விப்பட்டதும் உடனே விக்கிரவாண்டிக்கு வரச்சொன்னார்.  அதன்படி விக்கிரவாண்டி சென்ற திருமாளவனுக்கு அங்கே இருந்த  மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார் திருமாவளவன்.   

 

ட்

 

பரிசோதனைக்கு பின்னர்,  நேரத்துக்கு சாப்பிடுங்க,  நேரத்துக்கு தூங்கணும், நல்லா ஓய்வு எடுங்க என்று மருத்துவர்கள் திருமாவளவனுக்கு அறிவுறுத்தினர்.  இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.  இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.