அ.தி.மு.க.வின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரும் மனு இன்று (22/06/2022) பிற்பகல் 04.00 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "எந்த உறுப்பினரும் பொதுக்குழுவில் குரல் எழுப்பலாம் என்பதற்கு விதிகளைக் காட்டுங்கள் பார்ப்போம்" என்றார்.
அதைத் தொடர்ந்து மனுதாரர்களான ராம்குமார், சுரேன் தரப்பு வழக்கறிஞர்கள், "கட்சி விதிகளில் தற்போதைய நிலையே பொதுக்குழுவுக்கு பின் நீடிக்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அடிப்படை உறுப்பினர் அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர். கட்சித் தலைமை குறித்து பொதுக்குழுவில் திருத்தம் செய்ய ஈ.பி.எஸ். முடிவு செய்துவிட்டார்" எனத் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை விட பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. விதிகளைத் திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. விதிகளைத் திருத்திய பின் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும். சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது. பொதுக்குழுவுக்கு தடைக்கோரும் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. பொதுக்குழு முடிவைக் காக்கும் அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். பொதுக்குழுவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வரத் தொடங்கியுள்ளனர்" என்று வாதிட்டனர்.
அப்போது நீதிபதி, பொதுக்குழுவில் எந்த விவகாரத்தையாவது எழுப்புமாறு யாராவது கூறினால் என்ன செய்வது? என்று ஓ.பி.எஸ். தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ். தரப்பு வழக்கறிஞர்கள், ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு. ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது. என்னென்ன நடக்கவுள்ளது என்பதை அறிந்துக் கொண்டே பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். ஏற்கனவே, அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பிவிட்டார். தீர்மானத்தில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டியிருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே முடிவெடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதி இல்லை. வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே மற்றொருவரை நியமிக்க முடியும். வேறு அஜெண்டா ஏதும் இருந்தால் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுக்க முடியும். கொடுத்த தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கூட்டம் நடத்தலாம், கட்சி விதிகளில் மட்டும் திருத்தும் செய்யக்கூடாது என மனுத்தாரர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கூறிய நீதிபதி, இடைக்கால உத்தரவுக்காக வழக்கை சிறுது நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வழக்கு தொடர்பான உத்தரவு தயாரான பிறகு நீதிமன்ற அறையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.