Skip to main content

“வைக்காத பெயருக்காக போராடிய அண்ணாமலைக்கு இந்த பிரச்சனை தெரியாமல் போனது எப்படி?” - அதிமுக எம்.எல்.ஏ கேள்வி 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

ADMK MLA Questioned Annamalai on NLC Issue

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் வீடு கொடுத்தவர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் ஐ.ஐ.டி நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜி நகர், பட்டு அய்யனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு திடீரென மின்சார இணைப்பை துண்டித்த என்.எல்.சி. நிர்வாகம். 


இதனை கண்டித்து இன்று திங்கட்கிழமை (16.04.2022.) காலை 10 மணிக்கு நெய்வேலி என்.எல்.சி. இரண்டாம் சுரங்கம் நுழைவு வாயிலில் அனைத்து கட்சி போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., த.வா.க., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., மூ.பு.ப., வர்த்தக சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


அதில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆ.அருண்மொழிதேவன் பேசும் போது, ”என்.எல்.சி. நிர்வாகம் நிலம் வீடு கொடுத்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கவில்லை. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். ஆனால் தினக்கூலி அடிப்படையில் 360 ரூபாய் வேலையை கூட தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இன்றைக்கு உலக நாடுகளில் தமிழர்கள்தான் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் சி.இ.ஓ.க்களாக தலைமை பதவியில் இருக்கிறார்கள். 


இங்கே என்.எல்.சி.யில் வட இந்தியாவில் பி.இ. படித்து விட்டு இங்கே ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலையில் அமர்கிறார்கள். அடுத்து என்.எல்.சி.யில் தலைமை பதவியில் கூட அமர்ந்து விடுகிறார்கள். ஏன் நிலம் வீடு கொடுத்த எங்கள் வீட்டில் பி.இ. படித்த இளைஞர்கள் இங்கே இஞ்சினியராக பணியாற்ற கூடாதா.?! தினக்கூலிதான் வழங்குவீர்களா.? இதனையெல்லாம் நாங்கள் தட்டி கேட்கிறோம். சட்டமன்றத்தில் இதுகுறித்து நான் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அவர்கள் கூட எங்கள் மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இதே நிலைமைதான் என்கிறார். மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வேலைவாய்ப்பை பெற்றோம் என்றார்.


அப்போது பதிலளித்து பேசிய அமைச்சர் கணேசன், சட்டமன்றம் முடிந்து செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். சட்டமன்றம் முடிந்து விட்டது, ஆகையால் உடனடியாக குழுவை அமைத்து மக்களின் பிரச்சனைக்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இங்கே என்.எல்.சி. செயல்பட முடியாது.


இப்படியே தொடர்ந்தால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியாரை அழைத்து வந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றவர்.


திடீரென தன் பேச்சை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பக்கம் திசை மாற்றினார். அதாவது இல்லாத பிரச்சினைக்காக அண்ணாமலை போராட்டம் செய்வதாக ஆரம்பித்தவர். திருவாரூரில் தேரோடும் வீதிக்கு வைக்காத பெயருக்காக போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த நெய்வேலி என்.எல்.சி. மக்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் பிரச்சனை தெரியாமல் போனது எப்படி. நாங்கள் சட்டமன்றத்தில் பேசியது அவருக்கு தெரியவில்லையா.? இனியாவது தெரிந்து கொண்டு இப்பகுதியில் உள்ள பிரச்சனைக்காக அண்ணாமலை வந்து போராடி பாரதப் பிரதமரிடம் கூறி என்.எல்.சி.யின் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று முடித்தார்.  

 


 

சார்ந்த செய்திகள்