அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் சொகுசு கார்கள், ரொக்க பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இன்று (16/09/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குத் தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூபாய் 34.01 லட்சம் ரொக்க பணம், ரூபாய் 1.80 லட்சம் வெளிநாட்டுப் பணம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், ஐந்து கணினிகள் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டன. கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது 2016-2021- ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.