2011- ஆம் ஆண்டு, 2016- ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் மீது அறப்போர் இயக்கம் உள்ளிட்டோர் லஞ்ச ஒழிப்புத்துறையில் சொத்துக் குவிப்பு புகார் அளித்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டையில் உள்ள வீடு, அலுவலகங்கள், சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்பட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (16/09/2021) முதல் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது 2016- 2021- ல் வருமானத்திற்கு அதிகமாக 654% அளவுக்குச் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீடு. அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது கே.சி.வீரமணி வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிரடியாகச் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கே.சி.வீரமணியின் தொழில் பங்குதாரர் ஆஞ்சநேயலுவின் அண்ணாநகர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்தனர். அதேபோல், வேலூர் மாவட்டம், சேண்பாக்கத்தில் கே.சி.வீரமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. எனினும், மற்ற இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றன.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருவது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.