டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் நேற்று (26/02/2021) செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவித்தனர். அதன்படி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு நேர்காணலுக்கான தேதியையும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பா.ஜ.க.வின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சந்தித்து தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடனும் பா.ஜ.க. குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க.- பா.ம.க. இடையே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பா.ம.க.விற்கான தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு தமிழகத்தில் 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் விவரம் பின்னர் முடிவு செய்யப்படும்" என்று அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது பா.ம.க. கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20-ல் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.