திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஜெகன்நாதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்த வழக்கில் திருவண்ணாமலை நகரை சேர்ந்தவரும், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவருமான பாரதி மற்றும் அவரது சகோதரர் அன்பு மற்றும் கலை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் அவர்கள் நிரபராதிகள் என 2 ஆண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.
ஜெகன்நாதனை கொலை செய்ய பாரதி அன் கோவை அனுப்பியது அதே நூக்காம்பாடியை சேர்ந்த துரை என குற்றச்சாட்டு இருந்துவந்தது. அதிமுக கட்சியின் பிரமுகரான துரை, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு துணை தலைவராக இருந்தார். இந்த பகை ஜெகன்நாதன் குடும்பத்தாருக்கு இருந்துவந்தது.
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமஞ்சன கோபுர வாசல் அருகே துரை வெட்டிக்கொல்லப்பட்டார். கோயில் முன் நடைபெற்ற இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பார்த்திபன், மணிகண்டன், சம்பத், மணிகண்டன் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நவம்பர் 22ந்தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மகிழேந்தி, குற்றவாளிகள் பார்த்திபன், மணிகண்டன், சம்பத் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.