சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,650 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அம்மா மினி கிளினிக் என்பது பெயரளவில்தான் இருந்தது; எந்த இடத்திலும் பயனளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.