நடிகர் விவேக் நேற்று (15.04.2021) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், "அரசு மருத்துவமனைகள்தான் பெரும்பாலான மக்களுக்கு மருத்துவ சேவையைக் கொண்டு செல்கின்றன. நிறைய மக்களிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா, பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து நிறைய சந்தேகங்கள் உள்ளன. தடுப்பூசி போடுவதால் எந்தவித ஆபத்தும் இல்லையென பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கத்தோடு நான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்" எனக் கூறினார்.
இந்நிலையில் இன்று, நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவரது இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.