நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு வந்திருந்த நகைச்சுவை நடிகர் வையாபுரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அவரது மறைவு சினிமா குடும்பத்தாருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே எதிர்ப்பார்க்காத, நம்பமுடியாத ஒரு இழப்பு. யாராவது ஒருவருக்கு உடம்பு சரியில்ல, படுத்திருந்தாங்க இல்ல இந்த வியாதி அந்த வியாதினு சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆரோக்கியமா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி முந்தாநாள் ஊசி போடப்போகும் போதுகூட அவ்வளவு நீட்டா ஜெர்கின் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தார். ஆனால், இன்று உயிரிழந்துவிட்டார் எனச் சொன்னால் யாராலும் நம்பமுடியவில்லை. நான் முதன்முதலாக சினிமாவில் நடித்தேன் என்றால் அது விவேக் சார் கூடத்தான். முதன்முதலில் தூர்தர்ஷனில் ஆரம்பிச்சு 'இளையராகம்' படம் மூலம் அவருடன் இணைந்து நடித்தேன். அதேபோல் பத்திரிகையில் முதன்முதலாக வையாபுரி என பேர்வந்தது. விவேக் -வையாபுரி காம்பினேஷன் நல்லா இருக்குனு பேர் வந்ததும் அவரால்தான். முதன்முதலாக நான் வெளிநாடு சென்றதும் அவரால்தான். இன்னைக்கு நான் நல்லா இருக்கக் காரணமும் விவேக் சார்தான். உண்மையிலேயே இந்த நாள் என் வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத, ஜீரணிக்க முடியாத நாள். எப்படி சொல்வதென்றே தெரியவில்லை'' எனக் கண்ணீர் மல்கினார்.