நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
துணை முதலமைச்சர், அமைச்சர்கள் சென்ற பிறகு சிவாஜி கணேசனின் ரசிகரான தஞ்சாவூரைச் சேர்ந்த சாமி, மணி மண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில், தஞ்சாவூர் சாமி என எல்லோரும் என்னை அழைப்பார்கள், எனக்கு வயது 71. சிறு வயதில் இருந்தே அவரது தீவிர ரசிகன் நான். சிவாஜிகணேசனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவரை நேரில் சந்திக்க சென்னை வருவேன். அவரது இல்லத்திற்கு செல்வேன். சந்தித்து வாழ்த்து சொல்லுவேன். மரியாதையாக அன்பாக பேசுவார். சிவாஜி கணேசன் மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் நான் சென்னைக்கு வந்து அவரது சிலையை வணங்குவேன்.
ஒரே ஒரு கோரிக்கை. திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலையை திறக்க வேண்டும். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிவாஜி சிலை திறக்கப்படாமல் உள்ளது. அதனை திறக்க வேண்டும் என்பதுதான் என்னைப்போன்ற ரசிகர்களின் கோரிக்கை. அந்த சிலையை திறக்கக்கோரி மனு அளித்தோம், ஆர்ப்பாட்டம் நடந்தது. இருப்பினும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக துணி சுற்றப்பட்ட நிலையிலேயே உள்ளது. சிலையை திறக்க வாய்ப்பே இல்லையா? அவ்வளவுதானா? என கண்கலங்கினார்.