இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், கரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவருகின்றன. அதேபோல், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மற்றொருபுறம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணரவை சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள், விளையாட்டு பிரபலங்கள், முன்னணி நடிகர்கள் உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலேயே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.