தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானல், திருப்பத்தூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால், மூலிகைச் செடி, கொடிகள், அரிய வகை மரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகி வருகின்றன. மேலும், விலங்குகளும், பறவைகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி இன்று (13/03/2022) வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "கோடை வெயிலுக்கு இதமளிக்கிற இயற்கை தந்த வரம் கொடைக்கானல். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே இது ஒரு கனவு பிரதேசம். எத்தனையோ வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் அங்க இருக்கு. ஒரு எச்சரிக்கை, இது நெருப்புக்காக. ஒரு சின்ன தீப்பொறி பட்டா போதும், காடோடு சேர்ந்து பறவைகளும், வன விலங்குகளும் அழிஞ்சி போகிற அபாயம் இருக்கு. அதனால் பொதுமக்கள், நாம் எல்லோரும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான அந்த போரில் வனத்துறையினருடன் இணைத்திருப்போம். நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.