அரசியல் சினிமா எதுவானாலும் தன் தலைவனைத் தலைக்கு மேலே தூக்கி மக்கள் அன்னாந்து பார்க்கும் வண்ணம், வண்ண வண்ணப் போஸ்டர்களையும் அந்தத் தலைவனே வாயைப் பிளந்து பார்க்கும் அளவுக்கு வார்த்தைகளையும் இந்த ரசினனின் ஆசைகளையும் சேர்த்து கலந்து கட்டி வித விதமாகப் போஸ்டர் அடிப்பதில் கில்லாடிகளும், தைரியசாலிகளும் இருப்பது மதுரையில் தான்.
தவக்கலை, சிலுக்கு என்று ஆரம்பித்து நேத்து நடித்த புது நடிகர் வரை முதல் ரசிகர் மன்றம் வைத்து அவர்களை வாழ்த்தி போஸ்டர் அடித்தாதான் அவர்கள் திருப்தியடைவார்கள்.
அப்படிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம், இன்று மே 1 உழைப்பாளர் தினமும், தல அஜித்தின் பிறந்தநாளும் இணைந்து வருவதை சும்மாவா விடுவார்கள்? அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உழைப்பாளர் சிலையில் உள்ள தலையையே எடுத்துவிட்டு, தங்கள் தல அஜித்தின் தலையை மாற்றி ஒரு வாழ்த்து போஸ்டர் அடித்து அட்டகாசமாக மதுரை நகரெங்கும் ஒட்டியிருக்கிறார்கள். ''பாருங்க எங்க தலைவரின் பிறந்த நாளை உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்... அப்ப எங்க தல தான் உசந்தவரு" என்று சொல்லாமல் சொல்கிறார்களோ...