பண்டிகை காலங்களையொட்டி, கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் சிறைப் பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இது தொடர்பாக, மாநகர போக்குவரத்து கழகம் இன்று (13/10/2021) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயுதப்பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற விழாக் காலங்களையொட்டி, மக்கள் பெரிதளவில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலிக்க வாய்ப்பிருப்பதால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சரக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகள் மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும், அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், உரிய வரியைச் செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் என்று எச்சரிக்கைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிக கட்டணங்களை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து 1800-4256-151 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.