Skip to main content

"இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்!"- கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்திய அண்ணாமலை!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

"Act carefully with these in mind!" - Annamalai advises party executives!

 

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், 'மாநாடு' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார். அத்துடன், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநாடு படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் சிம்பு வீடு முன்பு விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

 

இந்த நிலையில், திரைப்படத்துறைக் குறித்து தேவையற்ற விமர்சனங்கள், கருத்துகளைக் கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு  எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி, நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது. 

 

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர, சகோதரிகள். சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 

 

கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. 

 

எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!

 

நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள்! எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்