தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாகவும், இது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளைச் சென்றடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.