வத்தலக்குண்டு அருகே காரில் கடத்தப்பட்ட ஹோட்டல் அதிபரை போலீசார் சினிமா பாணியில் மூன்று மணி நேரத்தில் மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த அன்புச் செழியன் என்பவர் பெரியகுளம் சாலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் அன்புச்செழியனுக்கும் ஹோட்டல் சொத்து தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வத்தலக்குண்டு புறவழிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அன்புச்செழியனை காணவில்லை யாரேனும் கடத்தியிருக்கலாம் என அவரது மகன் ஜெயகிஷோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சோதனையிட்ட போது அங்கு அன்புச்செழியனின் ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. இதனை அடுத்து அன்புச்செழியன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்பதை உறுதி செய்த போலீசார், நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல்லா, தயாநிதி ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து ஹோட்டல் அதிபரை கடத்திய மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
செல்போன் சிக்னல் மற்றும் பல்வேறு விசாரணைகள் அடிப்படையில் மதுரை காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக புகுந்த போலீஸார் அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அன்புச்செழியனை பத்திரமாக மீட்டனர். விசாரணையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அன்புச்செழியனை மர்மகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் கடத்தி வந்து வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் தப்பியோடிய கும்பலை விரட்டி பிடித்த போலீசார், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய வத்தலக்குண்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி, தெற்குத் தெரு சிவா, விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன், விஜய், பேரையூரைச் சேர்ந்த வடிவேல் . திருப்புவனம் மணி ஆகிய 7 பேரை பிடித்து கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் தொழிலதிபரை உயிருடன் மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார். வத்தலக்குண்டில் ஹோட்டல் அதிபர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.