8 arrested for attacking SI

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கீழரசூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று (16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை) தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கல்லக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் கீழரசூர் கிராமத்திற்கு சென்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும், முறையாக அனுமதி பெறாமலும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று தடுக்க முயன்றார். அவரது அறிவுறுத்தலை கண்டுகொள்ளாத ஜல்லிக்கட்டு குழுவினர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.

Advertisment

இதனால், சப்- இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் வாடிவாசல் சென்று அங்கிருந்தவர்களை விரட்டியுள்ளனர். இதில், வீரர்கள் சிலர் போலீசாரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ராஜேந்திரன் மகன் மணிராஜ் (25) என்பவரும் காயமடைந்தார். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

இதுகுறித்து லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நமசிவாயம் மற்றும் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மாலதி மற்றும் கல்லக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கல்லக்குடி எஸ்.ஐ. இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஊரடங்கு நாளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.