Skip to main content

7 பேர் விடுதலையில் 2வது தீர்மானத்தை அனுப்பி ஆளுநரைக் கையெழுத்திடவைக்க வேண்டும்; வேல்முருகன்

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
velmurugan tvk



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், சட்டப்படியான இரண்டாவது தீர்மானத்தை அனுப்பி சட்டப்படி ஆளுநரைக் கையெழுத்திடவைக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, 

 

28 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சட்டப் பிரிவு 161ன்கீழ் அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பி 100 நாட்கள் ஆகியும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. அதனால், அவர் கையெழுத்திட்டே தீரும்படியாக சட்டப்படியான அடுத்த தீர்மானத்தை அனுப்பியிருக்க வேண்டும்; அதை ஏன் செய்யவில்லை அதிமுக அரசு?

 

14 பேரை சுட்டுப் படுகொலை செய்துவிட்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்துவிட்டதாக அறிவித்தது தமிழக அரசு. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பெற்றிருக்கிறது அனில் அகர்வாலின் வேதாந்தா கார்ப்பொரேட் குழுமம். இதில் அரசின் கொள்கை முடிவாக சிறப்புச் சட்டம் இயற்றியே ஆலையை நிரந்தரமாக மூட முடியும் என்றிருக்க, அதனைச் செய்யாதிருப்பதேன் அதிமுக அரசு?

 

ஆனால் அதேசமயம் இந்தப் பிரச்சனைகள் குறித்துப் பேசக்கூட முடியாதபடி அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. சென்னையில் 7 பேர் விடுதலையை வலியுறுத்திப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைபரப்பு செயலர் பெரியார் சரவணன் கைது செய்யப்பட்டார்; பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

தமிழக அரசு மூடி சீல் வைத்துவிட்டதாக அறிவித்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான உத்தரவைப் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தூத்துக்குடி மக்களை உலுக்கிவிட்டிருக்கிறது. அதனால் அவர்களை உசுப்பியும்விட்டிருக்கிறது.

 

ஆனால் அதிமுக அரசு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதையும் காவல் வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் படையை அங்கு குவித்துள்ளது.

 

தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து வாகனத் தணிக்கை நடந்துவருகிறது. தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்கள் யாவும் சோதனையிடப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ஒன்றுக்கு மேல் மக்கள் சேர்ந்து நின்றால் அவர்களைக் கலைத்துவிடுகிறது காவற்படை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துண்டுபிரசுரம் வைத்திருந்தார்கள் என்று மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்கிறது.

 

ஆனால் எதற்கும் அஞ்சாமல் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவை கூடி சிறப்புத் தீர்மானம் இயற்றி கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என முழக்கமெழுப்பினர்.

 

இதே முழக்கத்தோடு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகள், அனைத்து சங்கங்கள், அனைத்து இயக்கங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.

 

தூத்துக்குடி புதுத்தெரு, பெரியநாயகிபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், அ. குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், பாத்திமாநகர், தாளமுத்துநகர் என அனைத்துப் பகுதிகளிலும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. வீடுகள் மட்டுமின்றி கடைகள், வாகனங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பண்டாரம்பட்டி மைதானத்தில் பொதுமக்கள் கூடி கறுப்புக் கொடி பிடித்து அணிவகுத்து நின்றனர்.

 

இன்று (21.12.2018) பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உறுதியான, உண்மையான, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் அளிக்கவுள்ளனர்.

 

ஆனால் இதை அறிந்துதான் தூத்துக்குடி மற்றும் அந்த மாவட்டத்தையே காவல் வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது அரசு எனக் குற்றம்சாட்டுகிறோம்.

 

போலீஸ் ராச்சியம் என்பது பிரச்சனைக்குத் தீர்வமல்ல; பிரச்சனைக்கான தீர்வு மக்கள் வேண்டுகின்றபடி தமிழக அரசின் உறுதியான, உண்மையான, தக்க நடவடிக்கைதான்.

 

அதாவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், சட்டப்படியான இரண்டாவது தீர்மானத்தை அனுப்பி சட்டப்படி ஆளுநரைக் கையெழுத்திடவைக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, தமிழக அமைச்சரவை கூடி, அரசின் கொள்கை முடிவாக ஆலையை மூடுவதாக சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இதனை வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.