வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. ஜூலை 7ந் தேதி மட்டும் 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 2,200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகள், தடுப்பு மையங்கள் முழுவதும் நிரம்பியுள்ளது.
தினமும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகவே வந்துக்கொண்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்வதற்கான வாகனங்கள் மிக குறைவாக உள்ளன. அதோடு, பி.பி.இ. கிட் மிகவும் குறைவாக இருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் வசதியும் மிக குறைவாக இருப்பதால், ஒரே ஆம்புலன்ஸ் வாகனத்தில் 5 பேர், 7 பேர் என அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது, இது மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
இப்படி அழைத்து செல்வது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் உத்தரவுக்கு எதிரானது என்கிறார்கள் மருத்துவ பணியாளர்கள். இப்படி பாதுகாப்பற்ற முறையில் செயல்படுவதால்தான், என்னென்ன ஏற்பாடுகள் செய்துள்ளீர்கள் என மாவட்ட நிர்வாகத்திடம் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம் என்கிறார்கள் திமுகவினர்.