தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பக்கமுள்ள புதியம்புத்தூர் முப்புலிவெட்டி, நடுவக்குறிச்சி, சில்லாநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் அருகிலுள்ள தூத்துக்குடி சிப்காட்டிலிருக்கும் தனியார் உலர் பூ தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகின்றனர். இதற்காக அவர்களை அந்த நிறுவனம் சார்பில் தினமும் காலையில் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு வேலை முடிந்து மாலை அதே வேன்களில் வீடு திரும்புவது அன்றாட நடைமுறை. நேற்று (10.09.2021) காலை 6.30 மணியளவில் முப்புலிவெட்டி, புதியம்புத்தூர், சில்லாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி நிறுவனத்திற்கு அந்த வேன் சென்றது. வேனை புதியம்புத்தூரைச் சேர்ந்த பாபு என்பவர் ஓட்டியிருக்கிறார்.
புதியம்புத்தூர் - தூத்துக்குடி ரோட்டில் சில்லாநத்தம் கிராமம் அருகே மெயின் ரோட்டில் வேன் செல்லும்போது, எதிரே தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேன் அப்பளமாக நொறுங்கியது. இந்தக் கோர விபத்தில் சில்லாநத்தம் செல்வராணி, முப்புலிவெட்டி கிராமத்தின் சந்தியா, சில்லாநத்தம் மேலத்தெருவைச் சேர்ந்த காமாட்சி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து அருகிலுள்ள கிராம மக்கள் விரைந்து வந்து காயம்பட்டோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூரைச் சேர்ந்த மணிமேகலை (20) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆனது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் பண்டாரம், வேன் டிரைவர் பாபு, பேச்சியம்மாள், சில்லாநத்தம் ராமலட்சுமி, நடுவக்குறிச்சி வனிதா (19), பொன்இசக்கி (44), செல்வமுருகன், லிங்கம்மாள் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. பொன்னரசு, புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய புதியம்புத்தூர் நயினார்குளத்தைச் சேர்ந்த பண்டாரம் மீது புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். கோர விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் ஓட்டப்பிடாரத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.