திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டு விமானச் சேவைக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று (19.07.2021) காலை சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது.
அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் மற்றும் எமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், இந்த விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் கூடுதலாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 பயணிகள் பல்வேறு வடிவங்களில் ரூ. 1.06 கோடி மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கம் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து நான்கு பேரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.