திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா நவம்பர் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பலவித கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடைபெற்றது. தேர்வீதியுலா கூட நடைபெறவில்லை. இந்தாண்டு கட்டுப்பாடுகள் இல்லாததால் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது மாவட்ட நிர்வாகம். மகாதீபத்தன்று 30 லட்சம் பக்தர்கள் என கணக்கிட்டு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
சிறப்பு ரயில்கள், ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தனர். 14 கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதை முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பியிருந்தது. ஆயிரக் கணக்கானவர்கள் மலை ஏறி 2668 அடி உயரத்தில் உள்ள அண்ணாமலையார் உச்சியை வணங்கிவிட்டு வந்தனர்.
டிசம்பர் 6 ஆம் தேதி காலை கோவில் இரண்டாம் பிரகாரத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை சரியாக 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோவிலுக்குள் இருந்தபடி சுமார் 6 ஆயிரம் பக்தர்கள் இதனைக் கண்டனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதனைக் கண்டு வணங்கினர். காவல்துறை கணிப்பின்படி தீபத்தன்று மட்டும் சுமார் 30 பக்தர்கள் வருகை தந்தார்கள் என்கிறது.
டிசம்பர் 7 ஆம் தேதி இரவு பௌர்ணமி தொடங்கி, டிசம்பர் 8 ஆம் தேதி மாலை பௌர்ணமி முடிகிறது. பௌர்ணமி தினத்தன்று இன்னும் சில லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தீபம் ஏற்றிய தினத்திலிருந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் மகாதீபம் எரியும். இதற்காக கோவில் நிர்வாகத்தில் இருந்து 4500 டன் நெய் வாங்கப்பட்டு மலை உச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 11 தினங்களும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். வரும் 10 தினங்களும் திருவண்ணாமலை நகரம் பக்தர்களால் நிரம்பியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.