மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், திருச்சியில் அது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நம்பர் லாட்டரி சீட்டில் கடைசி ஒரு இலக்கம் இருந்தால் 100 ரூபாய், இரண்டு இலக்கம் இருந்தால் 1000 ரூபாய், மூன்று இலக்கமும் இருந்தால் 25,000 ரூபாய் பரிசு என ஏழை கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து திருச்சியின் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே உள்ள மளிகைக் கடைகளிலும், முட்புதர்களிலும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது. 30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என்ற விலைகளில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகப் பொன்மலை காவல்நிலையத்தின் உதவி காவல் ஆணையர் காமராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது முட்புதரில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
திருச்சியின் பொன்மலையில் மட்டுமல்லாது, அரியமங்கலம், திருவரும்பூர் ஆகிய இடங்களிலும் இதுபோன்று மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகவும், போலீசார் அங்கும் தேடுதல் வேட்டை நடத்தி அவர்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.