Skip to main content

16 வயது சிறுமியை திருமணம் செய்த 28 வயது இளைஞர் - தக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

A 28-year-old man who married a 16-year-old girl

 

திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தாலுகா தேனீர்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சூரிய மூர்த்தி(28). இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பால் வியாபாரம் செய்ய வந்தவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி சந்தித்து அவரை தன் வலையில் விழ வைத்துள்ளார். சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அவரை  கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சிறுமியின் தாயார் தன் மகள் கடத்தப்பட்டுள்ளதாக காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பகுதியில் சூரிய மூர்த்தி வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுமன்னார்கோவில் போலீசார் சிறுமியையும், அவரைக் கடத்திச் சென்று சூரிய மூர்த்தி ஆகிய இருவரையும் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சூரிய மூர்த்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சி பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் வைத்து சிறுமியைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் சூரிய மூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு விவாகரத்து கொடுத்தவர்.

 

அப்படிப்பட்டவர் 16 வயது சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்றது குறித்து வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சூரியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் சூரியமூர்த்தி சிறை காவலில் வைக்குமாறும் சிறுமியை அவரது தாயாருடன் தங்கியிருப்பதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. சூரியமூர்த்தி ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றவர். மேலும் மூன்றாவதாக ஒரு சிறுமியைத் திருமணம் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாகச் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்