27 விழுக்காடு இடஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாகத் தடைவிதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனுத் தாக்கல் செய்துள்ளது. மருத்துவப்படிப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக இந்த இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மருத்துவப்படிப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்ந்துகொள்ள வேண்டும். எங்கள் இயக்கம் தொடர்ந்து இடஒதுக்கீடு குறித்து போராடிவருவதால் இதில் எங்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக எந்த தடையும் விதிக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. 10 சதவிகித ஒதுக்கீடு குறித்து இந்த மனுவில் திமுக எதுவும் குறிப்பிடவில்லை.