கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கு 20 சதவீதம், குறிப்பாகப் பெண்களுக்கு 48 சதவீத இட ஒடுக்கீடு கொடுத்தது சி.பி.எம். அணியினர். மேலும் அங்கே இளைஞர்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஆர்வமாகக் களம் கண்டனர். அந்த வகையில் 22 வயது கல்லூரி மாணவி திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயரானார். அதே போன்று தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடம்பட்டி ஊராட்சித் தலைவி பதவிக்கு 21 வயது இளம் பெண் ஸாருகலா பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். ஸாருகலா இளங்கலைப் பொறியியல் படிப்பு முடித்து தற்போது முதுகலைப் பொறியியல் படித்து வருகிறார். இந்த பகுதிக்குட்பட்ட லட்சுமியூரைச் சேர்ந்த தொழிலதிபரான ரவிசுப்பிரமணியன், சாந்தி தம்பதியரின் மகள் ஸாருகலா, ஆர்வமுடன், முற்போக்கு சிந்தனையுடன் பிரச்சாரம் செய்தவர். 3336 வாக்குகள் பெற்று 796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவியாகியிருக்கிறார். வருங்காலத்தில் இளைஞர்கள் அரசு சார்ந்த மக்கள் நிர்வாகப் பொறுப்பிற்கு வருவது ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.