பெரம்பலூரில் பதுக்கப்பட்ட 2,000 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க முடியாது என உணவுத்துறை தெரிவித்துள்ளது.
வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே நான்கு இடங்களில் மொத்தம் 2,000 டன் வெங்காயம் பதுக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பதுக்கப்பட்ட வெங்காயம் அழுகி இருப்பதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க முடியாது என வெங்காயத்தை ஆய்வு செய்தபின் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். எனவே பதுக்கல் வெங்காயத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையில் பதுக்கல் வெங்காயம் நாசியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டங்களின் திருத்தமே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்கள், பதுக்கலை ஊக்குவிக்கின்றன. விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளிடம் அதிகாரம் இல்லாத நிலையில், பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.