அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் 20 நாள் சிகிச்சையில் இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு இருதய அடைப்பு காரணமாகக் கடந்த 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது திட உணவு வழங்கப்படுவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் மேலும் 20 நாட்கள் சிகிச்சையில் இருப்பார் என்றும், அவரால் தானாக எழுந்து நடக்க முடியாததால், மருத்துவர்களின் உதவியுடன் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.