கோப்புப்படம்
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ஒருங்கிணைந்து அனுமதியின்றி மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனைகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முடிக்கடவு அருகே தொட்டி மடவு பள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் சுமார் 20 லிட்டர் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (58), ரங்கா (57) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். 20 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அவை கொட்டி அழிக்கப்பட்டது.