Skip to main content

மொய்விருந்துக்கு சென்று திரும்பிய போது நடந்த சோகம்! - கார் மோதி இரு இளைஞர்கள் பலி!

Published on 23/07/2018 | Edited on 27/08/2018
acci


பூச்சிகடை கிராமத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மொய்விருந்துக்கு சென்று திரும்பிய போது நடந்த சோக சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறியும், விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 5 மணி நேரம் சாலை மறியல் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசேந்திரன் மகன் பிரகாஷ் (20). தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் துளுக்கவிடுதி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் பாலமுருகன் (22). வெளிநாட்டில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு திரும்பியவர். இருவரும் நண்பர்கள்.

நண்பர்கள் இருவரும் வடகாடு கிராமத்தில் நடந்த ஒரு மொய் விருந்து விழாவிற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பூச்சிகடை கடைவீதி அருகே புனவாசல் கிராமத்திலிருந்து ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த அற்புதராஜ் ஓட்டி வந்த கார் மோதி கீழே விழுந்தவர்கள் மேல் ஏறிச் சென்று கார் பள்ளத்தில் இறங்கியது. அப்பகுதியில் நின்றவர்கள் விபத்திற்குள்ளானவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வந்த போது இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 

ed


சம்பவம் குறித்து அறிந்த அணவயல், துளுக்கவிடுதி, மாங்காடு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபனர். மேலும் விபத்து பகுதி என்றும் சாலை தடுப்பு அரண் வைக்கப்பட்டுள்ளது என்றும் பெயர் பலகை மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பு அரண் இல்லை. மேலும் இதே பகுதியில் பல விபத்துகள் நடந்து பலர் பலியாகி உள்ளனர் என்றும் தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த காரின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். மேலும் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு தூக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறவினர் மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் போலிசார் குவிக்கப்ப்டனர். சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட போலிஸ் சூப்பிரண்ட் செல்வராஜ், ஆலங்குடி போலிஸ் துணை சூப்பிரண்ட் அப்துல் முத்தலிபு, தாசில்தார் ரெத்தினாவதி மற்றும் வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை சடலங்களை கொடுக்க முடியாது என்றனர். இதனால் 4 மணி நேரத்தை கடந்தும் மறியல் போராட்டம் நடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்பட்டதால் 5 மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன் பிறகு சடலங்களை போலிசார் மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொய் விருந்துக்கு சென்று திரும்பி விபத்தில் சிக்கி இளைஞர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்