தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் தாலி செயினைப் பறிக்க முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் கடந்த 8 ஆம் தேதி மாலை அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகர் சந்திப்பு பகுதியில், நடந்து சென்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பெண் ஊழியர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிச் செயினைப் பறிக்க முயன்றபோது, பெண் தடுத்ததால் செயினைப் பறிக்க முடியாமல் போக, சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் ஓடி வரவும், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி காவல் ரோந்தின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து சென்ற இரண்டு நபர்களை நிறுத்தி அவர்களிடம் விசாரணை செய்தபோது, விசாரணையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள மாரிமுத்து விஜய் (21) மற்றும் 3 வழிப்பறி வழக்குகளும் 1 திருட்டு வழக்கும் நிலுவையில் உள்ள சங்கர்(23) ஆகிய இருவரும் தான் பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.