தமிழகம் முழுவதும் 05/05/2022 ஆம் தேதி தொடங்கிய 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுத மொத்தம் 8,37,317 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வுக்கு 32,674 பேர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிளஸ் டூ தேர்வு மட்டுமல்லாமல் 06/05/2022 ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுத மொத்தம் 9,55,139 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் என்ற தகவல் வெளியாகி அந்த அதிர்ச்சியை மேலும் கூட்டியது.
மொத்தமாக 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 1.18 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 1.18 லட்சம் மாணவர்கள் தேர்வை புறக்கணித்தது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில், 'நடப்பு கல்வியாண்டில் 10,11,12 வகுப்பு தேர்வுகளை எழுத மொத்தம் 26.77 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கரோனா காரணமாக ஏற்பட்ட சமூக பொருளாதார நெருக்கடி, குழந்தை திருமணம், ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்ந்ததால் 1,18,231 பேர் தேர்வை எழுதவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.