Skip to main content

10 ஆண்டு கால போராட்டம்.. ஐபிசி 377 நீக்கம்!!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
Naas Anjali_gopalan


மாற்று பாலின மற்றும் பால் ஈர்ப்பு கொண்ட மக்களின் இருப்பு மற்றும் சுயமரியாதையை உறுதி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்காக 10 ஆண்டு காலம் போராட்டம் நடத்தியிருக்கின்றனர் வானவில் கூட்டணி. ‘சென்னை பிரைட்,’ ‘ஓரினம்’, ‘நிறங்கள்’ உள்ளிட்ட 18 என்.ஜி.ஓக்களின் கூட்டமைப்பு தான் வானவில் கூட்டணி. அதாவது ஓரினச் சேர்கையாளர்களும், அவர்களை ஆதரிப்பவர்களின் சங்கமமே வானவில் கூட்டணி.

ஆண் ஆணுடன் உறவு கொள்வது, பெண் பெண்ணுடன் உறவு கொள்வது தவறில்லை என்பது இவர்களது வாதம். அது எங்களது உரிமை என போர்க்கொடி தூக்கும் இவர்கள், தங்களது சுயமரியாதையை நிலைநாட்டும் விதமாக கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் வானவில் சுயமரியாதை பேரணி நடத்தி உள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்சநீதிமன்றம். இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவில், யாரேனும் ஒரு ஆண் மற்றொரு ஆண், பெண் மற்றொரு பெண் அல்லது விலங்கினத்துடன் இயற்கைக்கு விரோதமாகப் புணர்வது தவறென்றும் மீறுவோர்க்கு ஆயுள் சிறைத்தண்டனை வழங்கலாமென்றும் உள்ளது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்து ‘நாஸ் நிறுவனம்’ தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம், வயது வந்த இருவர் பாலுறவில் ஈடுபடும் விருப்புரிமையை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாதென்று 2009-ல் அறிவித்த தீர்ப்பு வரவேற்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு டிச.11 2013 அன்று நீதிபதிகள் முகோபாத்யாயா - ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய அமர்வு பின்வருமாறு தீர்ப்பை வெளியிட்டது.

அதாவது, "இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக எந்த ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ தன் விருப்பப்படி உடலுறவுக் கொள்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் கட்டுவது ஆகிய தண்டனைக்கு உட்பட வேண்டும்." இந்த தீர்ப்பை எதிர்த்து, நாஸ் அறக்கட்டளை உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர், இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப்.06-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. அதாவது, சம்மதத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், இதை குற்றம் என கூறும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சம்மதம் இன்றியும், விலங்குகளோடும் உறவு வைத்துகொள்வது தொடார்ந்து குற்றமாகவே கருதப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள திருநங்கைகள், தமிழ்நாடு அரசு அரவாணிகள் நல வாரியத்தை விரிவுப்படுத்தி தமிழ்நாடு திருநர் நலவாரியமாக மாற்ற வேண்டும்.‘அரசு பணிகளிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் திருநர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று பாலின பாலீர்ப்பு கொண்ட மக்களுக்கான மனநல ஆலோசனை சேவை மற்றும் ஆதரவு குழுக்களை உருவாக்க வேண்டும். பணியிட சமத்துவம், பாகுபாடின்மை, பாலீர்ப்பு சார்பு மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கான பன்முகத்தன்மை பயிற்சி வழங்குதல் போன்றவற்றை அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும் என பெரிய பட்டியலை முன்வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓரினக் காதல்; 3 குழந்தைகளின் தாயுடன் வெளியேறிய இளம்பெண் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

lgbt issue in salem

 

சேலம் அருகே, தன்பாலின ஈர்ப்பால் 3 குழந்தைகளின் தாயும் இளம்பெண்ணும் இரண்டாவது முறையாக வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இரு பெண்களின் கணவர்களும் காவல்நிலையத்திற்கு நடையாக நடக்கின்றனர்.    

 

சேலம் கொண்டலாம்பட்டி அரசமரத்துக்காட்டூரைச் சேர்ந்தவர் ஷீலா(25). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிபட்டறை  தொழிலாளியுடன் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மாலா(39). திருமணம் ஆன இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷீலாவும், மாலாவும்  அருகருகே வசித்து வந்ததால் அவர்கள் நெருங்கிப் பழகி வந்தனர். இதுவே அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் ஓரினச் சேர்க்கை உறவாக மாறியது. மாலா தன்னுடன் நெருங்கி வராமல் தவிர்த்து வருவதை உணர்ந்த அவருடைய கணவர், மனைவியின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டுபிடித்தார். ஒரு கட்டத்தில் மாலாவும், ஷீலாவும் ஓரினச் சேர்க்கை உறவாளர்களாக மாறிப்போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாலாவின் கணவர், உடனடியாக அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு தம்மநாயக்கன்பட்டி பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

 

கடந்த ஓராண்டாக அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 3 ஆம் தேதி, ஷீலா திடீரென்று மாயமானார். அவருடைய கணவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. அவருடைய அலைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடி அலைந்த பிறகு வீடு திரும்பினார். வீட்டு படுக்கை அறையில் ஷீலா தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டது தெரிய வந்தது. படுக்கை மீது ஒரு கடிதமும் வைத்துவிட்டுச் சென்றிருந்தார். அந்தக் கடிதத்தில், ''எனக்கு கணவருடன் வாழப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் கட்டிய தாலியை கழற்றி வைத்துவிட்டேன். எனக்கு  பிடித்த மாலாவுடன் சேர்ந்து வாழச் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம்,'' என்று குறிப்பிட்டு இருந்தார்.  

 

இதைப் பார்த்து அதிர்ந்து போன கணவன், இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், ஷீலா மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பதிவு செய்த சில மணி நேரத்தில் மாலாவின் கணவரும், தன் மனைவியைக் காணவில்லை என கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில் ஷீலாவும், மாலாவும் ஓரினச் சேர்க்கை உறவு காரணமாக ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டுச் சென்றதும், இப்போது இரண்டாவது முறையாக அவர்கள் வீட்டை விட்டுச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. அப்போது உறவினர்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

3 குழந்தைகளின் எதிர்காலம் கருதியாவது இந்த உறவை கைவிடுமாறு கூறியுள்ளனர். அதன்பிறகுதான் மாலாவின் குடும்பம் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் வீட்டை விட்டுச் சென்ற மாலாவையும் ஷீலாவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

(இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் பெயர்கள் கற்பனையானவை). 

 

 

Next Story

தன்பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோர முடியாது - மத்திய அரசு!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

LGBT

 

தன் பாலின சேர்க்கை குற்றம் எனக் கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 377ஐ உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தன்பாலின திருமணத்திற்கு இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் & வெளிநாட்டுத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டது. இந்தநிலையில் இன்று (25.02.2021) மத்திய அரசு இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் "நாட்டின் சட்டங்களின் கீழ், தன் பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுவதற்கான அடிப்படை உரிமையைக் கோர முடியாது" எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, “லிவ்விங் டூகெதரில் சேர்ந்து வாழ்வதும், தன் பாலினத்தைச் சேர்ந்தவரோடு பாலியல் உறவு கொள்வதும் ஒரு கணவன், மனைவி மற்றும் குழந்தை என்ற இந்திய குடும்ப அமைப்போடு ஒப்பிட இயலாது” எனக் கூறியுள்ளது.

 

மேலும் "திருமணம் அதனோடு ஒரு புனிதத்தன்மையைக் கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் திருமணம் ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. நம் நாட்டில், ஒரு பயலாஜிக்கல் ஆணுக்கும் ஒரு பயலாஜிக்கல் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், திருமணம் என்பது பழமையான பழக்கவழக்கங்கள், சடங்குகள், நடைமுறைகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்களைப் பொறுத்தது" என மத்திய அரசு, தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.