தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில், வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, சமையலறை, தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவு முகக்கவசங்கள் இருப்பதையும், போதுமான அளவு கிருமிநாசினி இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். வகுப்பறையில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி இருப்பதை உறுதி செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பு இடைவேளையின்போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். நடமாடும் மருத்துவக் குழு, செவிலியரின் தொலைபேசி எண்கள் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திட வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்குபெறவிருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தும் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலையான வழிகாட்டு செயல்முறைகளை ஆசிரியர்கள், மாணவர்கள் கடைப்பிடித்திட மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.